பாடத்திட்ட தரத்தை உயர்த்தினால் நீட் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம்: தம்பிதுரை!

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும், என பர்கூரில் அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாநில பட்டியலில் இருந்த கல்வியை, இந்திராகாந்தி ஆட்சியில் தான் மத்திய அரசு பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அதனை, இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது.

அதிமுக கொள்கை ரீதியாக நீட் தேர்வு வேண்டாம் என்றாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறோம். இதனை தவிர்த்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்குவதால், அது மத்திய அரசின் கல்விக் கொள்கையின் கீழ் தான் வரும். கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிக்கு அனுமதி வழங்கிவிட்டு, மாநில கல்வி மத்திய அரசுக்கு சென்று விட்டது என குறை சொல்வது சரியாக இருக்காது.

சிபிஎஸ்இ கல்வியை விட மெட்ரிகுலேஷன் கல்வி தரத்தை மாநில அரசு உயர்த்த வேண்டும். சமச்சீர் கல்வி என சொல்லி தரத்தை குறைத்து விட்டதால், சிபிஎஸ்இ உள்ளிட்ட பல பள்ளிகள் வருகிறது. அங்கு மாணவர்கள் செல்கிறார்கள் கட்டணமும், அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மாணவர்கள் படிக்க முடியவில்லை. அதனால் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாநில அரசு தரமான கல்வியை மாணவர்களுக்கு தர வேண்டுமே தவிர, மத்திய அரசு மீது குற்றம் சுமத்தக்கூடாது.

சிபிஎஸ்இ பள்ளிகள் அமைக்க தடையில்லா சான்றிதழ் மாநில அரசு வழங்கிவிட்டு பிறகு மத்திய அரசு கல்விக் கொள்கையை எப்படி தடுக்கமுடியும். சிபிஎஸ்இ பள்ளிகளில் மத்திய அரசின் பாடப் பிரிவுகள் தான் நடத்தப்படும். இருமொழி கல்வி முறை இருக்கும் போது எதற்காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்குகிறது. சிபிஎஸ்இ பள்ளிக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.