சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: காவல் ஆணையர் அருண்!

போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்த 514 ஊர்க்காவல் படையினர் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டார். அவருக்கு ஊர்க்காவல் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னை காவல்துறையில் இருந்து ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்கள் பிரிக்கப்பட்ட போது, 750 ஊர்க்காவல் படையினர் 2 காவல் ஆணையரகத்துக்கும் கொடுக்கப்பட்டது. அதனால் 3080-ஆக இருந்த ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில், ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து, 500 புதிய பணியிடங்கள் உருவாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, ஊர்க்காவல் படையினருக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2 மாதம் காலம் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் ஊர்க்காவல் படையினரின் அழைப்பு பணிக்கான ஊதியம் சரியாக வழங்கப்படாமல் 4 அல்லது 5 மாதங்களுக்கு தொகுத்து வழங்கி வந்தனர். அந்த நடைமுறை மாற்றி தற்போது ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

போர் பதற்றம் காரணமாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரித்துள்ளோம். அதேபோல் கண்காணிப்பை அதிகாரித்து இருக்கிறோம். எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமோ, அந்த இடங்களில் உளவுத்துறை மற்றும் காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறது. மேலும் திரையரங்கம், வணிக வளாகங்கள், கோயில்கள், கடற்கரை என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதுமே வாகன சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.