சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், முன்னெப்போதையும் விட தற்போது அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் வழிநடத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், கடந்த 18 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

முன்னெப்போதும் இல்லாத வகையில் வாஷிங்டனிலிருந்து அறிவிப்புகள் வரும் நிலையில், தற்போது இது தேசிய தேவையாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், தேச நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் மோடி மோடி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தலைமை தாங்கி நாட்டின் அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் அழைத்துச் செல்லவேண்டும்.

கடந்த 18 நாட்களாக நடந்த விஷயங்களை விரிவாக விவாதிக்க, குறிப்பாக பகல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பிந்தைய நிலைமை மற்றும் நாடு ஒன்றுபட்டு அதன் கூட்டு உறுதியை நிரூபிக்கும் வகையில் முன்னோக்கிச் செல்லும் வழிமுறையை முடிவு செய்யவதற்கு ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, “இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இந்தியா – பாகிஸ்தான இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது” என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.