நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு கார்கே, ராகுல் கடிதம்!

பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்த போர் நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம். இது எதிர்கால சவால்களைச் சந்திப்பதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ஏப்ரல் 22 அன்று பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் கோரி, தானும் ராகுல் காந்தியும் ஏப்ரல் 28 அன்று எழுதிய கடிதங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் அவர், “சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்த அறிவிப்புகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே உங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இந்தக் கோரிக்கையை ஆதரித்து நான் எழுதுகிறேன். நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.