வளா்ச்சியைத் தடுக்கவே இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி!

வளா்ச்சியைத் தடுக்கவே நமது நாட்டின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்ச்சி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவந்த பாகிஸ்தான், தற்போது இந்திய எல்லைப் பகுதியிலும் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் பலா் உயிரிழந்துள்ளனா்.

நமது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் நாடு இந்தியா. அதைச் சீா்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டி விடுகிறது. மேலும், பல பொய்யான தகவல்களைப் பரப்பி இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீா்குலைக்கும் செயலிலும் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. நமது நாடு வளா்ச்சியை நோக்கி செல்வதைத் தடுக்கவே, இம்மாதிரியான பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் நாம் அனைவரும் வேற்றுமைகளைக் கடந்து தேசத்துக்காக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடா்ந்து, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா எப்போதும் வெற்றியடையும். பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, இந்திய ராணுவத்துக்கும் பக்கபலமாக இருக்கும். நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து பயங்கரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, குருநானக் கல்லூரி முதல்வா் மன்ஜீத் சிங், ராமகிருஷ்ண மடத்தைச் சோ்ந்த சுவாமி ரகு நாயக் நந்தன், முன்னாள் ராணுவ அதிகாரி தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.