சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி அழைப்பில் பேசினார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘போர் என்பது இந்தியாவின் தெரிவு அல்ல’ என சீன அமைச்சரிடம் அஜித் தோவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் நேற்று (மே 10) மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இந்நிலையில், சீன அமைச்சர் வாங் உடன் அஜித் தோவல் பேசியதாக சீன தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
‘பகல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்தியாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகம். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை தான் இந்தியா முன்னெடுத்தது. போர் என்பது இந்தியாவின் தெரிவு அல்ல. அது இரு தரப்புக்கும் உகந்ததல்ல. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு உறுதி ஏற்றுள்ளன. பிராந்திய ரீதியான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க எதிர்நோக்குகிறோம்’ என தங்களிடம் அஜித் தோவல் தெரிவித்துள்ளதாக சீனா கூறுகிறது.
பகல்காம் தீவிரவாதத் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான தீவிரவாதத்தையும் எதிர்ப்பதாகவும் சீன அமைச்சர் வாங் இந்த உரையாடலில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமர் முகமது இஷாக் தார் உடனும் வாங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.