இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “இப்போது போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுக்க வெடிகுண்டுச் சத்தம் கேட்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை போர் நிறுத்தம் குறித்த இருதரப்பு ஒப்புதல் அறிவிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திலேயே ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், சம்பா, கத்துவா, அகநூர், உதம்பூர், நவ்சேரா பகுதிகளில் போர் நிறுத்தத்தை அத்துமீறும் வகையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சுகளை இந்திய பாதுகாப்பு படை இடைமறித்து அழித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ராஜஸ்தானில் எல்லையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதன்பின் மற்றொரு பதிவில் வீடியோவுடன், “ஸ்ரீநகரை குறிவைத்து வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இது போர் நிறுத்தம் இல்லை” என்று முதல்வர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியாவும் பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் நேற்று (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.