‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள், 40 பாக். வீரர்கள் உயிரிழப்பு!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்திய படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் கய், வைஸ் அட்மிரல் பிரமோத், ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:-

டிஜிஎம்ஓ ராஜீவ் கய்: பகல்காமில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதற்கு காரணமான தீவிரவாதிகளை அழிக்கவே கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காந்தகார் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாத தலைவர்களும் உயிரிழந்தனர். இதன்பிறகு இந்திய எல்லைப் பகுதி மக்கள், ராணுவ, விமானதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்நடத்தியது. பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளும் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. இந்தியா நடத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி: கடந்த 10-ம் தேதி பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ என்னிடம் பேசினார். அப்போது போரை நிறுத்த முடிவுசெய்யப்பட்டது. சில மணி நேரத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 12-ம் தேதி (இன்று) நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

9 பாக். தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்களை முப்படைகளின் மூத்த அதிகாரிகள் வெளியிட்டனர்.