இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும்: சவுமியா அன்புமணி!

இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும். படிப்பையும் மீறி திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சவுமியா அன்புமணி கூறினார்.

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாநாட்டு திடலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த வன்னியர் சங்க கொடியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து பாமக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சித்திரை முழு நிலவு மாநாட்டில், பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-

நம் முன்னோர்கள் இல்லை என்றால், நாமும் இல்லை. அது எந்த அளவிற்கு உண்மையோ, அதேபோல், நாம் இல்லை என்றால் நம் முன்னோர்களும் இல்லை. ஏனென்றால், நம் முன்னோர்களின் பெயர்களை சொல்ல நாம் மட்டும்தான் இருக்கிறோம். வேறு யாரும் நம் முன்னோர்களின் பெயரையோ, அந்த தியாகிகள், வல்லல்கள், ராஜாக்கள், ராஜாதி ராஜாக்கள் பெயரை சொல்ல மாட்டார்கள், சொல்லவும் தயங்குவார்கள். மறந்து போய்விடுவார்கள். அந்த முன்னோர்களான ராஜாதி ராஜாக்களின் பெயர்களை சொல்வதற்கு நாம் மட்டும்தான் இருக்கிறோம். அவர்களை இன்றும் நினைவில் வைத்துள்ளோம்.

நித்திய கல்யாண பெருமாள் குடி கொண்டிருக்கும் இந்த திடலில் மாநாடு சிறப்பாக நடந்து வருகிறது. திடலுக்கு எதிரில் உள்ள நிலமானது, ஆயிரம் காணி ஆளவந்தாருடைய நிலம். 1,300 ஏக்கரை கோயிலுக்கும், மக்களுக்கும் தானமாக வழங்கியவர் ஆயிரம் காணி ஆளவந்தார். அந்த இடத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்று நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாகதான் நல்ல தண்ணீர் கிடைத்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த திட்டத்திற்கு கூட ஆயிரம் காணி ஆளவந்தார் நாயக்கரின் பெயரை யாரும் வைக்கவில்லை. அதை கூட நாம்தான் சொல்ல வேண்டும். நாம்தான் அதை அவர்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள், மது, போதை, கஞ்சா போன்ற எந்த பழக்கமும் இன்றி உடல் நலம், மன நலத்துடன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல படிப்பு வேண்டும். நீங்கள் அனைவரும் நன்றாக படித்து, நல்ல வேலையில் அமர வேண்டும். சுய தொழில் செய்ய வேண்டும். படிப்பையும் மீறி திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் நம்முடைய வரலாறை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.