நீலகிரி மாவட்டம் ஊட்டி மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டிக்கு வந்தார்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி வந்தார்.
நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலான குஞ்சப்பனை பகுதியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு தலைமையில் வழியெங்கும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேரிங்கிராஸ் பகுதியில் நகரச் செயலாளர் ஜார்ஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசின் விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2.45 மணிக்கு முதல்வர் வந்தார். அவருடன் நீலகிரி எம்.பி. ஆ.ராசா, அரசு கொறடா கா.ராமச்சந்திரனும் வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் முதுமலை புலிகள் காப்பகத்தை கண்டுகளிக்கிறார். 15-ம் தேதி காலை ஊட்டி மலர்க் கண்காட்சியை தொடங்கிவைக்கும் முதல்வர், பின்னர் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களுக்கு பட்டா வழங்குகிறார். மேலும், தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து உரையாடுகிறார்.
வரும் 16-ம் தேதி ஊட்டிலிருந்து சாலை மர்க்கமாக கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார், நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.