“கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.
அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.