வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் தன்னை மிரட்டுவதாக நடிகை கௌதமி போலீசில் புகார்!

வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் தன்னை செல்போனில் அழைத்து மிரட்டுவதாகவும், பாதுகாப்பு கோரியும் நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடன் பாஜகவில் பணியாற்றி வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துகளை ஆக்கிரமித்ததாக கூறி கவுதமி ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீலாங்கரையில் உள்ள ரூ. 9 கோடி மதிப்புள்ள தனது சொத்தை அழகப்பன் அபகரித்ததாகவும் நடிகை கௌதமி புகார் கொடுத்துள்ளார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக மாநகராட்சியில் மின் இணைப்பு கட்டிட அனுமதி பெற்று தனது நிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் அந்த கட்டுமானம் நடைபெறும் இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தனது நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் தன்னிடம் 96 ஆயிரம் ரூபாய் கேட்பதாகவும், வழக்கறிஞர் என்ற போர்வையில் வாட்ஸ் அப் மூலம் தன்னை மிரட்டுவதாக கவுதமி புகார் அளித்துள்ளார். தனக்கு எதிராக நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுவதாக புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தன்னை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் கௌதமி.