தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காததால், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி அதில் மீண்டும் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும் இரு அரசிதழ்களாக வெளியிடப்பட்டன. இந்த சட்டங்கள் அரசிதழ்களாக வெளியிட்டதன் மூலம், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது.
இந்த சட்டங்களில், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய பிரிவுகளை எதிர்த்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்த சட்டப்பிரிவுகள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக உள்ளதால், இதனை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. எதற்காக இந்த சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன என எந்த தீர்க்கமான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும், துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் என்றால், அந்த அதிகாரம் சட்டமன்றத்துக்கா, அமைச்சரவைக்கா அல்லது மாநில அரசு நிர்வாகத்தின் தலைவரான ஆளுநருக்கா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் வகையில் கடந்த 1994 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நிலுவையில் உள்ள சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறாமல் புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முரணானது என்பதால், புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமனத்துக்கான தேர்வுக்குழுவை நியமிக்கவும், துணைவேந்தர்களை நியமிக்கவும் தடை விதிக்கவேண்டும் எனவும், அரசிதழை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.