பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் என்ன பெருமை: கனிமொழி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை நினைத்து எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இந்தியாவை உலுக்கியது. மாணவிகள், இளம் பெண்களை துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த கொடூரம், 2019ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. பெண் ஒருவர் கதறிய வீடியோவால் தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, மக்கள் மத்தியில் இந்த பிரச்சனையை மிகப்பெரிய விவாதமாக மாற்றியது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் காவலர் உச்சரித்தது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போராடினர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது அப்போதைய அதிமுக அரசுதான் என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

பொள்ளாச்சி வழக்கில் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. ஏனென்றால் பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றும் அத்தனை முயற்சிகளிலும் அதிமுக ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக நிற்கவில்லை. அதிமுகவில் பொறுப்பில் இருந்தவர்கள் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு நெருக்கமாகவும் இருந்தனர். அதனால் அவர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்ய அதிமுக தயாராக இல்லை. அப்படியான சூழலில் யாருக்கும் அதிமுக ஆட்சி மீதோ, எடப்பாடி பழனிசாமி மீதோ நம்பிக்கை இல்லாத காரணத்தால், அவர்கள் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அதிமுக ஒன்றும் தாமாக சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றவில்லை. அதிமுக ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையே வந்திருக்காது. அதனால் சிபிஐ-க்கு விசாரணையை மாற்றியது தனக்கு பெருமை என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.