வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, வக்பு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்ததோடு, 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலும் அளித்தார். இதனால் அந்த மசோதா சட்டமாக மாறியது. இதற்குக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, வக்பு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மே 5ம் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் கடந்த 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து 4 வேலை நாட்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. எனவே, ஏற்கனவே உள்ள இடைக்கால உத்தரவுகளை ஒத்திவைக்கவோ அல்லது பிறப்பிக்கவோ விரும்பவில்லை என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்றம், புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நீதிபதி பி.ஆர். கவாய் இந்த வழக்கை விசாரிப்பார் என்று கூறினர். இதன்படி, இந்த வழக்கு மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

சஞ்சீவ் கன்னா கூறுகையில், மத்திய அரசின் பதில் மனுவை நாங்கள் ஆழ்ந்து படிக்கவில்லை. வக்பு சொத்துகள் பதிவு குறித்த சில கருத்துகளை மத்திய அரசு எழுப்பி உள்ளது. சில சர்ச்சைக்குரிய புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. அவற்றை பரிசீலிக்க சிறிது காலம் தேவைப்படும். நான் இந்த இடைக்காலத்தில் தீர்ப்பை ஒத்திவைக்க விரும்பவில்லை. விரைவில் இவ்விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் எனது அமர்வில் அல்ல. தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில், மே 15 ஆம் தேதி இம்மனுக்கள் விசாரணைக்கு வரும்” என்றார். இதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் கவாய், சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதுவரையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.