டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அடுத்த முறை ஆஜராவதாக சொன்ன சீமான் ஏன் இன்றும் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டி.ஐ.ஜி. வருண் குமார் ஆஜரானார். “கடந்த முறை விசாரணையின் போது, வழக்கில் முறையாக ஆஜராவேன் எனக் கூறி சென்றீர்கள். அப்படி இருக்கையில் இன்று ஏன் ஆஜராகவில்லை?” என சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மீது சீமான் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து திருச்சி சரக டிஐஜி-யான வருண்குமார் மற்றும் நாதக கட்சியினர் வார்த்தைப்போர் முற்றியது. இதனையடுத்து தன்னைப் பற்றியும், தனது குடும்பம் பற்றியும் சீமான் அவதூறாக பேசியதாக வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என மாவட்ட நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, ஏப்ரல் 8 ஆம் தேதி சீமான் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது. இந்த அவதூறு வழக்கு தொடர்பான ஆவணங்கள், சீமானுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, நீதிபதி விஜயா முன்பு டி.ஐ.ஜி வருண்குமார், தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணாவுடன் ஆஜரானார். மேலும், சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், சீமான் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக சீமானின் வழக்கறிஞர் மட்டும் ஆஜரானார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மே மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அடுத்த முறை சீமான் ஆஜர் ஆவார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டி.ஐ.ஜி. வருண் குமார் ஆஜரானார். ஆனால், சீமான் இன்றும் ஆஜராகவில்லை. இதையடுத்து, “கடந்த முறை விசாரணையின் போது, வழக்கில் முறையாக ஆஜராவேன் எனக் கூறி சென்றீர்கள். அப்படி இருக்கையில் இன்று ஏன் ஆஜராகவில்லை?” என சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி விஜயா கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சீமான் தரப்பு வழக்கறிஞர், உடல்நிலை காரணங்களால் சீமான் ஆஜராக இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, கடந்த முறையே கண்டனத்துக்குப் பிறகுதான் ஆஜர் ஆனார், இனிமேல் இப்படி காரணம் சொல்லக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.