காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது, பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இன்று அதிகாலையில் ஜம்மு – காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு – காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில் மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், பயங்கரவாதிகளில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஒரு கான்கிரீட் தூணின் பின்னால் பதுங்கியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொலைவில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், பயங்கரவாதிகள் உடைந்த கொட்டகைக்குள் பதுங்கியிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த 48 மணி நேரத்தில் காஷ்மீரில் நடந்த இரண்டாவது மோதலாகும். இந்த மோதல் முதலில் குல்காமில் தொடங்கி பின்னர் ஷோபியனில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் தொடர்ந்து வருகிறது. இதில் நான்காவது பயங்கரவாதி இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.