அவதூறு வழக்கில் 21ம் தேதி கண்டிப்பாக சீமான் ஆஜராக வேண்டும்: திருச்சி கோர்ட்!

டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஆஜராகாததால், மே 21ம் கண்டிப்பாக அவர் நேரில் ஆஜராக திருச்சி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

திருச்சி டிஐஜி வருண்குமார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்-4ல் நடந்து வருகிறது. இவ்வழக்கில் டிஐஜி வருண் குமார் கோர்ட்டில் நேரில் ஆஜராகி தன் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி நடந்த விசாரணையின் போது, சீமான் மே 8ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சீமான் ஆஜராகவில்லை. எனவே வழக்கு விசாரணை மே 15ம் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணையின்போதும் சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் சார்பில் ஆஜரான வக்கீலிடம் மாஜிஸ்திரேட் விஜயா, கடந்த முறை உங்களிடம் கேட்ட பின்னரே வழக்கு விசாரணை 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்றும் ஆஜராகவில்லை என்றால் என்ன செய்வது. உங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வழங்கப்படும் கடைசி வாய்ப்பு இது எனக்கூறி விசாரணையை மே 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் சீமான் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.