அமைதியா? போரா? என்பது பாகிஸ்தான் கையில்தான் இருக்கு: அண்ணாமலை!

“எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது” எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக, நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மூவர்ண யாத்திரை நடைபெற்றது. திருப்பூரில் நடைபெற்ற யாத்திரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த யாத்திரையைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பாஜகவின் முன்னணி தலைவர்கள் உரையாற்றினர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

பக்கத்து நாட்டை நாம் சகோதரர்களாக பார்த்துக் கொண்டு இருந்தாலும் கூட, 1947ல் இருந்து பிரச்சனை மேல் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள். நம் மக்களை படுகொலை செய்கின்றனர், காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்க்கின்றனர். எத்தனை முறை நாம் அவர்களுக்கு புத்தி கற்பித்தாலும் கூட, அவர்களுக்கு தெரியவில்லை. நம்முடைய தாக்குதல் என்பது பாகிஸ்தானில் உள்ள அப்பாவிகள் மேல் கிடையாது. போர் நிறுத்தம் என்பது தற்காலிக நிறுத்தம் மட்டும்தான். இன்றில் இருந்து இந்தியாவின் மீது பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலையும் நம் நாடு அதை போராகப் பார்க்க போகிறது.

பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.