தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது எதி்ர்கொள்ளப் போகும் தென்மேற்கு பருவழை இயல்பானதாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்ய வேண்டும்.
பேரிடர் மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற வசதிகளோடும் தயார் நிலையில் இருக்கவேண்டும். வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, முன் தயாரிப்புகளோடு செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படும் பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
சமூக ஊடகங்களில், செய்திகளில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மக்களுக்கும் செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். குறைகளைச் சொல்லும், உதவிகளை கேட்கும் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, பராமரிப்பு குறித்து நுகர்வோருக்க எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். சாலைப் பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க, தமிழகம் முழுவதும் உள்ள ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து, தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம், ஒளிரும் டைவர்சன் போர்டுகளை வைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.
மழைக் காலங்களில், நெல் மூடைகள், தானியங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, சேமிப்பு கிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்துவதுடன், கொசுத் தடு்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் தற்போது நடைபெறும், மழைநீர்வடிகால், கால்வாய்கள் மற்றும் குளங்கள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பருவமழை ஆயத்த நடவடிக்கைளை உடனடியாக செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறைகளின் செயலர்கள், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீர்வள ஆதாரத் துறையை பொறுத்தவரை, கடந்த மே 17-ம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர் இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத் தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவை சாகுபடிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து, வேளாண்மை– உழவர் நலத்துறையைப் பொறுத்தவரை, தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட எல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதை வேளாண் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.