டெல்டா மாவட்டங்களில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உரிய ஆய்வை மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, விழுப்புரம், செங்கல்பட்டு, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் மழைநீரில் நனைந்து வீணாகியிருக்கும் செய்திகளும் மிகுந்த வேதனையை அளிக்கிறது.

ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் விவசாய நிலங்களிலும், நெல் கொள்முதல் நிலையங்களிலும் எவ்வித பயனுமின்றி சேதமடைந்து கிடப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கிறது.

எனவே, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் விவரங்களை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.