திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் இன்று (20.05.2025) கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அயோத்திதாச பண்டிதரின் திருவுருவப் படத்திற்கு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன், ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், துணை மேயர் மு.மகேஷ் குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் ச.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனிடையே, அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம், ஆதி திராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர், எனத் ‘திராவிடப் பேரொளி’ அயோத்தி தாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு! சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.