பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
மத்திய அரசி்ன் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்தாண்டுக்கான கூட்டம் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார். இதற்காக அவர் மே 23- ம் தேதி மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 24-ம் தேதி கூட்டத்தை முடித்துவிட்டு, அன்று மாலையே சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. கூட்டத்தில், தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.