நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: நீதிபதி பி.ஆர்.கவாய்!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது’’ என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வாதன் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 13-ம் தேதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் முடிந்து புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதி அமர்வுக்கு வக்பு வழக்கு மாற்றப்பட்டது. இதன்படி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஸி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: வக்பு திருத்த சட்டம் தொடர்பாக கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி 3 விவகாரங்கள் குறித்து மட்டுமே நீதிமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

1) நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எந்த ஒரு சொத்தையும் வக்பு சொத்தாக அறிவிக்க கூடாது.

2) சொத்து விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதை வக்பு சொத்தாக அறிவிக்க கூடாது.

3) அரசு தரப்பு நிர்வாகிகளை தவிர்த்து வக்பு ஆணையங்கள், வக்பு கவுன்சில்களில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக இருக்க வேண்டும்.

இந்த 3 விவகாரங்கள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது திருத்த மசோதா மட்டுமே. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விதிகளே புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்: முறையான ஆவணங்கள் இல்லாத சொத்துகளை வக்பு சொத்துகளாக கருத முடியாது என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஆவணமும் கிடையாது. இதற்கு உச்ச நீதிமன்றமே உரிய தீர்வை வழங்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர் மட்டுமே வக்புக்கு நிலத்தை வழங்க முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் வக்பு கவுன்சிலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்கூட வக்பு சொத்துகள் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி: நாடு முழுவதும் ஏராளமான வக்பு சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை பறிக்கும் நோக்கில் புதிய சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் ஹமாதி: கடந்த 1904-ம் ஆண்டு முதல் 1954-ம் ஆண்டு வரையிலான காலத்தில் பழங்கால மசூதிகள் உட்பட ஏராளமான சொத்துகள் வக்பு வாரிய சொத்துகளாக அறிவிக்கப்பட்டன. புதிய சட்டத்தால் இந்த சொத்துகள் பறிக்கப்படலாம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு வாதம் நடந்தது.

பின்னர், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியதாவது:-

பொதுவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது. அவை சட்டப்பூர்வமானதாகவே கருதப்படும். தற்போது வக்பு திருத்த சட்டம் தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் இடைக்கால நிவாரணம் கோரப்படுகிறது.

இந்த சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள விதிமீறல்கள், தவறுகள் தொடர்பாக போதிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகே உரிய முடிவு எடுக்க முடியும். இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதற்கிடையே, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நிஜாம் பாஷா, புதிதாக பிரமாண பத்திரங்களை தாக்கல்செய்ய அவகாசம் கோரினார். ஆனால், ஏற்கெனவே போதிய அவகாசம் தரப்பட்டுள்ளதால், இனிமேல் புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியதாவது: பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளேன். கடந்த 6 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருக்கிறேன். தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவியேற்றேன். அடுத்த 6 மாதங்கள் இந்த பதவியில் நீடிப்பேன். இந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தை திறம்பட வழிநடத்துவேன். வக்பு திருத்த சட்டம் தொடர்பாக மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தற்போது (நேற்று) 3 மணி நேரம் 45 நிமிடங்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து உள்ளனர். 21-ம் தேதியும் (இன்று) விசாரணை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.