சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை!

பகல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா மேம்பட்டு வந்த நிலையில் பகல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, பாக். தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. இதனால் ஏற்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போர் 4 நாட்கள் நீடித்தது. அதன்பின் இரு நாடுகள் இடையே கடந்த 10-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் சுற்றுலாத் துறை பாதிப்படைந்தது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிப்படைந்தது. சுற்றுலா பயணிகள் பலர் தங்களின் முன்பதிவை ரத்து செய்தனர்.

இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சுற்றுலாத்துறையின் தற்போதைய திட்டங்கள், மேம்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.