தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்: மனோ தங்கராஜ்!

“தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார்” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலகத்தில் பன்னீர் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனையை ‘பன்னீர் ஹட்’ என்ற பெயரில், அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (மே 22) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த முறை கோவை வந்தபோது பன்னீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை திறந்து வைத்தார். தற்போது அந்த தொழிற்சாலையில் உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது.

கோவை மக்கள் கோரிக்கையை ஏற்று பன்னீர் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை மையம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் விநியோகத்தை ஆவின் செய்து வருகிறது. முதல்வரின் ஆலோசனையால் ஆவின் வளமான துறையாக மாறியுள்ளது. ஆவின் டிலைட் என்ற பால் பாக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். தனியார் பால் விலையை நிர்ணயம் செய்வதை பால்வளத்துறை கட்டுப்படுத்த முடியாது. எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும் ஆவின் பக்கம் மக்கள் மற்றும் விவசாயிகள் வர வேண்டும். தனியார் பால் கொள்முதலில் சீசனுக்கு ஏற்ப விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும். ஆனால் ஆவின் விலை எப்போதும் நிரந்தரமானது. விவசாயிகளிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ஆவின் புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ‘வாட்ஸ் ஆப்’ குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 40 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி தேவையான நிதியை பெற்றுத் தருவார். இவ்வாறு அவர் கூறினார்.