சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே தனியார் மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை வெளியிடுவதாக இருந்தது. இந்நிலையில், கிராம மக்கள் எதிர்ப்பால் அந்த புத்தகத்தை வெளியிடாமல் சென்றார் ஆளுநர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். கடந்த 1998-ம் ஆண்டு தேர் வடம் பிடிப்பதில் இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் 2022 முதல் 2006 வரை மாவட்ட நிர்வாகமே முன்னின்று தேரோட்டம் நடத்தியது. அதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெறவில்லை. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தான் கண்டதேவி தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆளுநர் வெளியிட இருந்த நூலுக்கு எதிராக சார் ஆட்சியர், காவல் துறையினரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். வரலாற்றை தவறாகப் புனைந்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை வெளியிடக்கூடாது என மனு அளித்தனர். ஆளுநர் ரவிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த நூலை வெளியிடாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.