பாகிஸ்தானை மண்டியிட வைத்த நம் ராணுவம்: பிரதமர் மோடி புகழாரம்!

‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். வெறும் 22 நிமிடத்தில் பாகிஸ்தானின் 9 இடங்களை அழித்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானை நம் படை வீரர்கள் மண்டியிட வைத்தனர். நம் நாட்டு பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர்” என்று பிரதமர் மோடி பெருமையாக பேசி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகனீர் அருகே தேஷ்நோக் என்ற இடத்தில் இன்று பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாடு மேற்கொண்ட ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை பெருமையாக அவர் பேசியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:-

பாரத மாதாவின் சேவகனான மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புக்குள் ரத்தம் ஓடவில்லை சிந்தூர் (குங்குமம்) தான் ஓடுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பதிலடியாக வெறும் 22 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 முக்கிய இடங்களை அழித்தோம். ரஹீம் யார் கான் விமானப்படை தளம் (பஞ்சாப் மகாணத்தில் உள்ளது) ஐசியூவில் உள்ளது. நம் நாட்டு பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களை ரத்தம் சிந்த வைத்தவர்களின் கணக்கு இன்று தீர்ந்துவிட்டது. இந்தியா மவுனமாக இருக்கும் என்று நினைத்தவர்கள் இன்று தங்களின் வீடுகளில் ஒளிந்து கொள்கிறார்கள். ஆயுதங்கள் இருக்கிறது என்று பெருமைப்பட்டவர்கள் இன்று மண்ணில் புதைந்து கிடக்கிறார்கள்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானை நம் படை வீரர்கள் மண்டியிட வைத்தனர். நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை உலகம் முழுவதும் பார்த்துள்ளது. சிந்து நதி நீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. எதிர்காலத்தில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், இந்தியா தனது பதிலடிக்கான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்கும். நம்முடைய அடுத்த தாக்குதல் அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்போது நாம் உள்கட்டமைப்புகளுக்காக 1.5 மடங்கு அதிகம் செலவிட்டு வருகிறோம். உலகின் அனைத்துத் திசைகளிலும் நாம் வளர்ச்சியடைந்து வரும் வேகத்தைக் கண்டு உலகமே வியப்படைகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.