கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடி வலைகளை அறுத்து நடுக்கடலில் வீசி இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடி வலைகளை அறுத்து நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தவிக்கவிட்ட நிலையில் டீசலின்றி நடுக்கடலில் தத்தளித்த செருதூர் மீனவர்கள் 4 பேர் சக மீனவர்கள் உதவியோடு கரை திரும்பிய நிலையில், சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணப்பொருள்களை பறி கொடுத்ததாக வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படக்கில் கடந்த 20 ஆம் தேதி சண்முகம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி உள்ளனர். மேலும் சுமார் 700 கிலோ மீன்பிடி வலை, 1 ஜிபிஎஸ், ஒரு செல்போன், ஸ்டவ், டார்ச் லைட், டீசல் உள்ளிட்ட சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறிகொடுத்த செருதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், சக்திமயில், ஜெயராமன் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோர், டீசலின்றி நடுக்கடலில் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அருகில் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்களிடம் டீசல் பெற்றுக் கொண்டு செருதூர் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பி உள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.