உச்ச நீதிமன்றம் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டியுள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 6 – 8 ஆம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் அமலாக்கத்துறை சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் சோதனை வழக்கில் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தது. தனிநபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, உச்ச நீதிமன்றம் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்றும், அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டியுள்ளது என்றும் கூறினார். ஆர் எஸ் பாரதி கூறியதாவது:-
நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றமே அங்கீகாரம் கொடுக்கிறது. பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டியுள்ளது நீதிமன்றம். அமலாக்கத்துறை என்பது பிளாக்மெயில் அமைப்பை போல் செயல்படுகிறது.. தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறை சோதனை நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு சார்பில், “தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது அமலாக்கத்துறை தலையிட்டது ஏன்?” என்று விவாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜி ஆர் சுவாமிநாதன், வி லட்சுமி நாராயணன் அமர்வு, தனி நபர் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா?..
அனைத்து எல்லைகளையும் தாண்டி அமலாக்கத்துறை செயல்படுவது கண்டனத்துக்கு உரியது. எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது” என்று கூறியதோடு, டாஸ்மாக் மீதான ஈடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கிறது என்று கூறிய நீதிபதிகள், கோடை விடுமுறைக்கு பின் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று கூறி ஒத்தி வைத்தனர்.