குடிநீர் வாரிய அதிகாரி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசின் நமஸ்தே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் அமைப்பின் பரிந்துரைப்படி, பயனாளிகளை அடையாளம் காண தலித் இந்திய வர்த்தக சபையை நியமித்துள்ளதாகவும், மாநில காவல் துறைக்கு எந்த புகாரும் அளிக்காமல் நேரடியாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யக் கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, துய்மைப்பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் தலித் வர்த்தக மற்றும் தொழில் சபை, ஜென் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய அமைப்புகளை வழக்கில் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக இந்த இரு அமைப்புகளும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார். நாளை நடைபெற உள்ள விசாரணையின் போது தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.