தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த சட்டங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.
இதை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருந்ததாவது:-
பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிக்கும் வகையில் கடந்த 1994-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நிலுவையில் உள்ள சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறாமல் தமிழக அரசு புதிதாக சட்ட திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது பேரவையின் விதிகளுக்கு எதிரானது. தவிர, தமிழக அரசின் இந்த மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு எதிராக இருப்பதால், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் இந்த சட்டங்களை சட்டவிரோதமானவை என்று அறிவிக்க வேண்டும். அதுவரை இந்த சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேஷாத்ரி நாயுடு, யுஜிசி சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல்.சுந்தரேசன் தமது வாதத்தில் கூறியதாவது:-
பல்கலைக்கழகங்களை பாதுகாக்கும் நோக்குடன்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கிவிட்டது. துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் சட்டங்கள் யுஜிசி விதிகளுக்கு முரணானவை என்பதால் தான் தடை கோருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக உயர்கல்வி துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் கூறியதாவது:-
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசி விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை அவசர, அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை.
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞரான மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அரசின் சட்டங்களுக்கு தடை கோரும் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க போதிய அவகாசம் தராமல் விடுமுறை கால அமர்வில் அவசரகதியில் விசாரிப்பது நியாயம் அல்ல.
ஏற்கெனவே, ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தற்போது இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக மனுதாரரின் வழக்கை தள்ளிவைப்பதால் வானம் இடிந்துவிடாது. யுஜிசி விதிகளைவிட தமிழக அரசின் சட்டங்கள் மேலானது. இந்த இடைக்கால தடை கோரும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய தமிழக அரசின் மனு செல்லாததாகி விடும். இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை விதிக்க கூடாது. வழக்கில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.