ட்ரம்ப் கருத்தை நிராகரிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்: காங்கிரஸ்!

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ஒரு முறை கூட நிராகரிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

கடந்த 11 நாட்களில் 8 முறை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தானே காரணம் எனத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். அவரது உற்ற நண்பரான பிரதமர் மோடியோ அதுகுறித்து மவுனம் காக்கிறார். ட்ரம்ப் இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருவரையும் பாராட்டுகிறார். அதற்கு அர்த்தம், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நிலையில் உள்ளன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரதமர் ஏன் மவுனம் காக்கிறார். தனது தலையீட்டால் தான் ஆபரேஷன் சிந்தூர் நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக ட்ரம்ப் சொன்ன போது நாடே அதிர்ச்சி அடைந்தது. இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். ஆனால் அவர் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகள் குழுக்களை அனுப்ப போவதாக கூறுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவது இது 8-வது முறை. ஆபரேஷன் சிந்தூரை முடிவுக்கு கொண்டு வர வர்த்தகத்தை பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார். பிரதமர் மோடியோ அமெரிக்க அதிபரின் இந்தக் கூற்றை ஒருமுறைக் கூட மறுக்கவில்லை. இந்த மவுனத்தின் அர்த்தம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தால், நாங்கள் அந்த மோதலை முழுவதுமாக தீர்த்து வைத்தோம். நான் அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன். அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் பெரிய ஒப்பந்தம் செய்து வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் மோதலில் யாராவது கடைசியாக சுட வேண்டியிருந்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு மோசமாகிக்கொண்டே போனது. மோதல் பெரியதாகவும் நாடுகளுக்குள் ஆழமாகவும் சென்றது. நாங்கள் அவர்களிடம் பேசினோம், நாங்கள் அதை சரிசெய்துவிட்டோம் என்று சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன், இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏதோ நடக்கிறது, அது ட்ரம்பின் தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பாகிஸ்தானில் சில சிறந்த மனிதர்களும், சில நல்ல தலைவரும் உள்ளனர். இந்தியாவில் என் நண்பர் மோடி உள்ளார், அவர் ஒரு சிறந்த மனிதர், நான் அவர்கள் இருவரையும் அழைத்து பேசினேன். இது நல்ல விஷயம்” என்று ட்ரம்ப் கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களைத் தீர்க்க தான் உதவியதாக அமெரிக்க அதிபர் பலமுறை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.