சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்: இந்தியா!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் பாகிஸ்தானுக்கு துருக்கி வெளிப்படையாக ஆதரவு அளித்தது. பாகிஸ்தானுக்கு பெருமளவில் ட்ரோன்களை கொடுத்து உதவியது. இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.

இந்நிலையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. ஒரு தீவிரவாத சூழலை பாதுகாத்து வருகிறது. இவற்றை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், இவற்றுக்கு எதிராக நம்பத்தகுந்த மற்றும் சரிபார்க்க கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் துருக்கி வலுவாக வலியுத்தும் என இந்தியா எதிர்பார்க்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா கோரிய தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இத்துடன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை விட்டு வெளியேறினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.