ரஷ்ய செனட்டர்களுடன் கனிமொழி எம்.பி தலைமையிலான தூதுக் குழு சந்திப்பு!

திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது.

இது குறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றாக இணைந்துள்ளோம். ரஷ்யாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் பிற செனட்டர்களுடன் எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு சந்திப்பு நடத்தியது’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார், அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவுக்கு இந்தியா – ரஷ்யா உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு இன்று மாஸ்கோவுக்கு வந்தது. இந்தக் குழுவை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார் வரவேற்றார். ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தக் குழு பயணம் செய்கிறது. இது ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத போராட்டத்தை எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்.பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி மியான் அல்தாஃப் அகமது, பாஜக எம்.பி கேப்டன் பிரிஜேஷ் சௌக்தா, ஆர்ஜேடி எம்.பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி எம்.பி அசோக் குமார் மிட்டல், முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்பி ஜாவேத் அஷ்ரஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் தேசிய ஒருமித்த கருத்தையும் உறுதியான அணுகுமுறையையும் உலக நாடுகளிடம் முன்வைக்கிறது. பயங்கரவாதத்துக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை இது உலகுக்கு தெரிவிக்கும் என்று ஏற்கெனவே மத்திய அரசு கூறியிருந்தது.

இது குறித்து பேசிய கனிமொழி, “இந்தியாவுக்கு ரஷ்யா ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது, நாங்கள் எப்போதும் ராஜதந்திர பிரச்சினைகள், வர்த்தகம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றி வருகிறோம். பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும்போது ரஷ்யாவை அணுகுவது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் 26 பேர் உயிரிழந்தனர், எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும், உலகுக்கு நமது நிலைப்பாட்டை விளக்கவும் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப இந்திய அரசும் பிரதமரும் முடிவு செய்தனர்” என்று கூறினார். ரஷ்ய பயணத்தை முடித்த பிறகு, இந்த தூதுக் குழு ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயினுக்குச் செல்கிறது.