பிள்ளை பாசத்திற்காக வெண்குடை வேந்தராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாறிவிட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றது குறித்து விமர்சித்த ஜெயக்குமார், “மூன்று ஆண்டுகளாக மாநில உரிமைகளுக்காக நிதி பெறப்படவில்லை. ஆனால், இப்போது பிள்ளை பாசத்திற்காக வெண்குடை வேந்தராக மாறிய ஸ்டாலின், டெல்லியில் தவம் இருக்கிறார். மூன்று ஆண்டுகளாக டெல்லி செல்லாதவர், இப்போது நிதி பெறுவதற்காக சென்று காத்திருக்கிறார் என தெரிவித்தார்.
திமுகவை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், “உப்பு தின்பவன் தண்ணி குடிப்பது போல, தப்பு செய்தவர்கள் ஓடுகிறார்கள். அமலாக்கத்துறை (ED) விரைந்து நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டில் மன்னர் குடும்பமாக தம்மை பிரபலப்படுத்தி, ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை நடத்தும் திமுகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். ஊழல்கள் வெளியாக சட்ட நடவடிக்கை அவசியம். இது தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் கூட,” எனக் கூறினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக தன்மானத்தை விட்டு டெல்லியில் காத்திருப்பதாகவும், இது தமிழ்நாட்டிற்கு வேதனை தரும் விஷயம் எனவும் குறிப்பிட்டார்.
திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஜெயக்குமார், “எடப்பாடி பழனிசாமியின் மகனை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என திமுக கூறுகிறது என்ற கேள்விக்கு, இதற்கு ஏற்கனவே பொதுச் செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துவிட்டார். தற்போதைய நிலைமையை மட்டும் பேசுங்கள், திசை திருப்பும் வேலையை பத்திரிகைகள் செய்ய வேண்டாம்” என தெரிவித்தார்.