அமித் ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜகவின் தலைவராக இருக்கிறார் என்று ராகுல் காந்தி பேசி இருந்தார். 2005ஆம் ஆண்டு குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்த போது, சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அமித் ஷா மீது அதிக அழுத்தம் இருந்தது. அமித் ஷாவை கைது செய்ய சிபிஐ தேடிய போது, திடீரென 4 நாட்களுக்கு காணாமல் போனார். இதன்பின் அவர் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார்.

இதன்பின் 3 மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்த அமித் ஷா, 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தமாக விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சித் தலைவராக இருக்கிறார் என்று கூறினார்.

அப்போது பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா இருந்து வந்தார். இதனால் ராகுல் காந்திக்கு எதிராக ஏராளமான மாநிலங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைவர் பிரதாப் கத்தியார் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு 2018, ஜூன் 9ஆம் தேதி தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதன்பின் அவதூறு வழக்கில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அப்போது ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் பிடியாணைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பின் ரேபரேலி தொகுதி எம்பி தரப்பில் அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 26ஆம் தேதி நீதிமன்றம் முன்னிலையில் ராகுல் காந்தி ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.