நீதிபதிகளை சாதி ரீதியாக வசை பாடுவதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்து முன்னணி!

உயர் நீதிமன்ற நீதிபதிகளை சாதி ரீதியாக வசை பாடுவதை திமுகவினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இதுகுறித்து காடேஸ்வரா சி.சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகிய நீதிபதிகளை சாதி ரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனர்.

திமுக என்ன நினைக்கிறதோ, எதற்காக வழக்கு தொடுத்து இருக்கிறதோ அது அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு எழுதப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் எதிர்பார்க்கின்றனர். திமுகவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இது திராவிடத்துக்குக் கிடைத்த வெற்றி, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று குதூகலிப்பார்கள். அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் போது சாதியை கையில் எடுத்து தங்களின் வக்கிர புத்தியைக் காட்டுவார்கள்.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சாதி ரீதியாக, மொழி ரீதியாக பிரிவினையை உண்டாக்கி தரம் தாழ்ந்த கருத்துக்களை திமுக வெளிப்படுத்தும். ஆபாசப் பேச்சும், தனிநபரை மோசமாக தாக்கிப் பேசுவதும் திமுகவின் இரட்டை குழல் துப்பாக்கிகள். நீதிபதிகளை கொச்சைப்படுத்தி பேசும் செயலை திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சாதி பாகுபாடு கற்பித்து கருத்து தெரிவித்த திமுகவினரை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.