பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ராமதாஸ்!

பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெரியசாமி நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நிர்வாகக் குழுவை தேர்வு (VC Convenor Committee) செய்வதற்காக ஆட்சிக் குழு கூட்டத்தை வரும் 28-ஆம் தேதி முனைவர் பெரியசாமி கூட்டியிருக்கிறார். இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு தற்காலிக துணை வேந்தருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பெரியார் பல்கலைக்கழக விதிகளின்படி தவிர்க்க முடியாத சூழலோ அல்லது நெருக்கடியான நிலையோ ஏற்படும் காலங்களில் மட்டும் தான் தற்காலிக துணை வேந்தரை நியமிக்க முடியும். துணைவேந்தராக இருப்பவர் பதவிக்காலம் முடிந்து செல்லும் போது தற்காலிக துணைவேந்தரை நியமிக்க முடியாது; மாறாக ஆட்சிக் குழுவைக் கூட்டி துணைவேந்தர் நிர்வாகக் குழுவைத் தான் அமைக்க வேண்டும். ஆனால், துணைவேந்தர் பொறுப்பிலிருந்து தாம் ஓய்வு பெற்ற பிறகும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமது ஆதரவாளரான முனைவர் பெரியசாமியை, தற்காலிக துணைவேந்தராக கடந்த 19-ஆம் தேதி ஓய்வு பெற்ற துணைவேந்தர் ஜெகநாதன் நியமித்திருக்கிறார். இந்த நியமனமே சட்டவிரோதமாகும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து கடந்த 17-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்த நான், தமக்கு வேண்டியவரை தற்காலிக துணைவேந்தராக நியமிக்க ஜெகநாதன் முயல்வதாகவும், அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். தமிழக அரசு நினைத்திருந்தால் அன்றே உயர்கல்வித்துறை செயலாளர் மூலம் ஆட்சிக்குழுவின் அசாதாரணக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் முனைவர் பெரியசாமி போன்றவர்கள் தற்காலிக துணைவேந்தராக வந்திருக்க முடியாது. ஆனால், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தற்காலிக துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் பெரியசாமி அப்பதவிக்கு எந்த வகையிலும் தகுதியற்றவர். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதுடன், அது குறித்த வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது.

பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையில் முறைகேடு செய்ததாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு நியமித்த பழனிசாமி குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவரை தற்காலிக துணை வேந்தராக நியமித்திருப்பதும், அதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதும் கேலிக் கூத்தாகவே பார்க்கப்படுகிறது.

தற்காலிக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் பெரியசாமிக்கு அவரது பதவியையும், முன்னாள் துணைவேந்தர் ஜெகநாதனையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. அதனால், வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தேவையற்ற அமளிகளை ஏற்படுத்தி, நிர்வாகக் குழுவை தேர்வு செய்யாமல் தாமே தற்காலிக துணை வேந்தர் பதவியில் நீடிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளக்கூடும். அதைத் தடுத்து தகுதியானவர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் தற்காலிக துணைவேந்தர் பதவியிலிருந்து முனைவர் பெரியசாமியை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுக் கூட்டத்தை உயர்கல்வித்துறையின் செயலாளரே தலைமையேற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.