137 பொறியியல் கல்லூரிகளுடன் தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம்: பழனிவேல் தியாகராஜன்!

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், புத்தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான ‘ஜிக்சா’ தளத்தின் பயன்பாடு தமிழகத்தின் 2, 3-ம் நிலை நகரங்களுக்கும் கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘உமாஜின் – 2024’ மாநாட்டில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி-ஹப்) உருவாக்கிய ‘ஜிக்‌சா’ எனும் தளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்கள், தொழில் துறை, தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து, தமிழகத்தில் ஆழ்தொழில்நுட்பங்களுக்கான (டீப்டெக்) வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த தளம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, தொழில் துறையிலும், அரசு நிர்வாகத்திலும் உள்ள சிக்கல்கள் குறித்த அறிக்கைகளை பெற்று, புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை கொண்டு தீர்வு காண்பது, தரவுகளை பகுப்பாய்வு செய்து தேவையான முன்மொழிவுகளை வழங்குவது, புத்தொழில் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் சந்திக்க செய்வது, புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் ஜிக்‌சா தளம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜிக்‌சா தளத்தில் இதுவரை 137 கல்வி நிறுவனங்கள், 303 புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் 6,065 ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த தளம் மூலம் 43 தொழில் துறை நிறுவனர்கள், 69 முதலீட்டாளர்கள், 42 தொழில் துறை வழிகாட்டிகள் புத்தாக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, 137 பொறியியல் கல்லூரிகளுடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்மூலம் ஜிக்‌சாவின் பயன்பாடு சென்னையை தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 2, 3-ம் நிலை நகரங்களுக்கும் விரிவடைய செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.