ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான 5 புதிய தகவல்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பகல்காம் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் 5 புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்:

1. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பதன்கோட் மற்றும் சூரத்கர் பகுதியில் முகாமிட்டிருந்த வான் பாதுகாப்பு படைப்பிரிவில் முதல் முறையாக இரண்டு பெண் கர்னல்கள் இடம் பெற்று பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடித்ததில் முக்கிய பங்காற்றினர். 800 பேர் கொண்ட படைப்பிரிவில் இடம் பெற்ற இந்த 2 பெண் அதிகாரிகளும், 2 ஆண்டுகளுக்கு முன்புதான் பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. பாகிஸ்தானின் பதில் தாக்குதல் 8 மணி நேரம் மட்டுமே நீடித்தது. ஆபரேஷன் பன்யன் அல்-மர்சூஸ் என்ற பெயரில் கடந்த 10-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியது. இந்திய விமானப்படை தளங்களை தகர்க்கும் நோக்கில் இந்த தாக்குதல் தொடங்கியது. ஆனால், காலை 9.30 மணிக்குள் இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. அதேநாளில் இந்தியா விமானப்படை நடத்திய 4 துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் முடங்கின. இதனால் போர் நிறுத்தத்துக்காக அமெரிக்காவின் உதவியை அவசரமாக நாடியது பாகிஸ்தான்.

3. லாகூரில் அமைக்குப்பட்டிருந்த சீன தயாரிப்பு எல்ஒய்-80 என்ற வான் பாதுகாப்பு அமைப்பை, இந்தியப் படை ஹார்ப்பி ட்ரோன் மூலம் தகர்த்தது. மேலும், கராச்சியில் இருந்த எச்க்யூ-9 என்ற சீனாவின் வான் பாதுகாப்பு ஏவுகணை யூனிட்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் இந்தியா தகர்த்தது.

4. பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த, இந்திய விமானப்படையின் ரஃபேல் மற்றும் சுகோய் விமானங்கள் களத்தில் இறங்கின. ரஃபேல் விமானங்களில் இருந்து ஸ்கால்ப் ஏவுகணைகளும், சுகோய் போர் விமானங்களில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளும் வீசப்பட்டன. முதல் தாக்குதல் ராவல்பிண்டியில் சக்லாலா என்ற இடத்தில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் இங்கு செயல்பட்டு வந்த வடக்கு வான் கட்டுப்பாட்டு மையம் முடங்கியது. இதையடுத்து ஜகோபாபாத் மற்றும் போலாரி விமானப்படை தளங்கள் மீதும் இந்திய போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசியதால், சில மணி நேரங்களில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு முடங்கியது.

5. கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானின் பஹவல்பூரில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இப்பகுதி தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கியது. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 42 பேர் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.