4 மாநிலங்களின் 5 சட்டப்பேரவைகளுக்கு ஜூன் 19-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு!

நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், காடி தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர், கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்எல்ஏ பயானி பூபேந்திர கந்துபாய், தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதியும் காலியாக உள்ளது.

கேரளாவின் நிலாம்பூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ பி.வி. அன்வர் ராஜினாமா செய்ததாலும், பஞ்சாப் மாநிலத்தின் லூதியான தொகுதி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி கோகி மற்றும் மேற்குவங்கத்தின் காளிகஞ்ச் எம்எல்ஏ நசிருத்தீன் அஹமது ஆகியோர் உயிரிழந்ததாலும் மேற்சொன்ன மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடைத்தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன.