ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் கட்சியின் அவை தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் ஈரோடு பரிமளம் மகாலில் ஜூன் 22-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 7,738 தனியார் பள்ளிகளில் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வரை பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதை முடக்கும் விதமாக, இந்த திட்டத்துக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.617 கோடியை விடுவிக்காமல் காலம் தாழ்த்துவது கண்டனத்துக்குரியது. கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வரும் சூழலில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய வைகோ, ‘‘அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்து, மக்கள் இதயத்தில் சிறப்பான இடத்தை முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளார். அமலாக்க துறை சோதனைக்கெல்லாம் அவர் பயப்பட மாட்டார். அஞ்சாத உள்ளத்தோடு அனைத்தையும் சந்திப்பார்’’ என்றார்.