மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி!

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்களை இந்த அமைப்பு வரையறுக்கிறது. இதன் தலைவராக பிரதமர் பதவி வகிக்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர், துணைத் தலைவராக செயல்படுவார். உலக வங்கியில் 28 ஆண்டுகள் பணியாற்றிய சுமன் பெரி தற்போது நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக உள்ளார்.

நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், குமாரசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்களுக்கு பதிலாக மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பங்கேற்றார். ஆனால் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த ஆண்டு கூட்டத்தை அவர் புறக்கணித்திருப்பதை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

நிதி ஆயோக் கருப் பொருள்: வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்த லட்சியத்தை எட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிதி ஆயோக்கின் கூட்டம் நடைபெற்றது.

2, 3-ம் நிலை நகரங்களின் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்துவது, அந்த நகரங்களின் சேவைத் துறையில் தீவிர கவனம் செலுத்துவது, கிராமங்களில் வேளாண் துறை சாராத வேலைவாய்ப்புகளை பெருக்குவது, கிராமங்களில் குறு, சிறு தொழில்களை ஊக்குவிப்பது, நகரங்களில் முறைசாரா வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, குறு, சிறு தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது, சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிப்பது ஆகியவை குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது 140 கோடி இந்தியர்களின் லட்சியம் ஆகும். இந்த லட்சியத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் நகரங்களை கட்டமைக்க வேண்டும். போதிய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச தரத்துக்கு இணையாக ஒரு சுற்றுலா தலத்தை உருவாக்க வேண்டும். வளர்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம் நகரங்கள் அபரிதமாக வளர்ச்சி அடையும்.

அனைத்து துறைகளிலும் பெண்கள் சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அவர்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு அனைத்து மாநிலங்கள், அனைத்து நகரங்கள், அனைத்து கிராமங்கள் சமச்சீராக வளர்ச்சி அடைந்தால் 2047-ம் ஆண்டுக்கு முன்பாகவே வளர்ச்சி அடைந்த இந்தியா லட்சியத்தை எட்ட முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.