பாஜக தலைவர்ளை திருமாவளவன் சந்தித்து பேசியதால் பரபரப்பு!

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்து இருந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை அருகே இருந்த அம்பேத்கர் சிலை சேதமடைந்ததால் அம்பேத்கரின் சிலை அமைப்பு குழு என்று ஒரு குழுவை உருவாக்கியது. அந்த குழுவின் மூலம் புதிய அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்ட நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், அம்பேத்கர் சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருக்கும்போது சொன்னார். திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை உறவு இருக்கிறது என்றார். இந்த இரண்டு இயக்கத்தினரும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பேசக்கூடியவர்கள். அந்த புரிதலோடு தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கைகளை நிமிர்த்தி களத்தில் நிற்கின்றோம். அவருடன் இணைந்து தொடர்ந்து பயணிப்போம்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து சென்னைக்கு திரும்புவதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோவை பதிவிட்டு இந்தச் சந்திப்பு எதிர்பாராத ஒன்று என்றும் பாஜகவின் மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன், நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோரைச் சந்தித்தது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளன. திமுக கூட்டணி அப்படியே தொடரும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், விசிக-வை மையமாக வைத்து கூட்டணி சலசலப்புகள் எழுந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் விமர்சித்து இருந்தார். சமூக நீதி நிலைப்பாட்டை பாதுகாக்க அதிமுக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருமாவளவன், பாஜக மற்றும் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார். ஆனால் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்பதே என் விருப்பம்” எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்தச் சூழலில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோரை திருமாவளவன் சந்தித்த புகைப்படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.