உலக பட்டினி தினம் நாளை (மே 28) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள், தங்களது பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அனைத்து நாடுகளிலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி, உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் பல ஆண்டுகளாகப் பொது மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் விலையில்லா விருந்தகங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, இன்று வரை செயல்பட்டு வருகின்றன.
தவெக தலைவர் வழிகாட்டுதலில், ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா விருந்தகங்கள் இயங்கி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், கட்சியின் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நாளை (மே 28) உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தங்களது பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், என்று தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.