கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கவும், செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், மருத்துவ கல்வித்துறை மந்திரி சரணபிரகாஷ் பட்டீல், தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு பயப்பட தேவை இல்லை. ஆனால் வரும் நாட்களில் நிகழும் நிகழ்வுகளை ஆராய்ந்து அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், சுவாச பிரச்சினை உள்ளவர்கள் முககவசம் அணிவது நல்லது. இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாரந்தோறும் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனை நடத்தி நிலையை கண்காணிக்க வேண்டும். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தேவையான வசதிகளை செய்துகொள்ள வேண்டும்.
சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, இத்தகைய நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். எத்தகைய நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் கொரோனா உதவி மையத்தை திறக்க வேண்டும். வரும் நாட்களில் விமான நிலையங்களில் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அலட்சிய மனப்பான்மை வேண்டாம். அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறையில் வெளியூர் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது.
மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.