100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.1400 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை மத்திய பாஜக அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 3,000 கோயில்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் குடமுழுக்கு செய்து சாதனை படைத்து ஆன்மிகப் புரட்சி செய்திருக்கிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், அதனை செயல்படுத்திய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையும் மனதார பாராட்டுகிறேன். தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை போற்றுகிற வகையில், மதச்சார்பற்ற அரசாக செயல்படுவதை இந்நிகழ்வு மேலும் உறுதிபடுத்துகிறது. இதன்மூலம் விஷம பிரச்சாரம் செய்து வருகிற ஆர்எஸ்எஸ், சங்பரிவாரங்களுக்கு மிகப் பெரிய அளவில் பதிலடி கொடுக்கின்ற வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உரிய நிதியை ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு புறக்கணித்ததற்காக ஏற்கெனவே வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தோம். இன்று தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒருநாள் ஊதியமான 319 ரூபாயை 336 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இதனால் 88 லட்சத்து 16 ஆயிரத்து 448 பேர் பயனடைகின்றனர். கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூபாய் 2900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க வேண்டிய ரூபாய் 1400 கோடியை மத்திய பாஜக அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.