சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார் திமுக எம்.பி ஆ.ராசா. குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின்னர் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட், மங்கள் டெக் பார்க் லிமிட்டெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.5 கோடியே 53 லட்சம் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்திருந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் மற்றும் வழக்கின் சில ஆவணங்களை வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி ஆ.ராசா கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஆ.ராசாவின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான விவரங்கள் அவரிடமே இருக்கும். சாட்சி விசாரணையின் போது அதனை அவர் சரிபார்க்கலாம் என்று சிபிஐ தரப்பு வாதம் வைத்தது. இதனையடுத்து வருமான வரி தாக்கல் செய்த விபரங்களை கோரிய ஆ.ராசாவின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன் ஜூன் 17 ஆம் தேதி தள்ளுபடி செய்தார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் இன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும், அப்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிபதி வெங்கடவரதன் முன்பாக இன்று ஆஜராகினர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பதாக ஆ.ராசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைத்து வழக்கு விசாரணையை ஜூன் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஆ.ராசாவை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ஆ.ராசா “புதிய நீதிபதி வந்திருப்பதால் மரியாதை நிமித்தமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனேன். இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
