அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம் ஈரான் மற்றும் ஓமன் இடையே உள்ள குறுகலான ஹோமுஸ் ஜலந்தியைத்தான் பயன்படுத்துகின்றன.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்த வழியாக செல்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தபோது, ஹோமுஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடுப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது. ஆனால், அதை செய்யவில்லை. ஆனால் அந்த வழியாகச் சென்ற இஸ்ரேல் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டது. சில கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது. இந்த முறை ஹோமுஸ் ஜலசந்தியை மூடினால் அது கச்சா எண்ணெய் போக்குவரத்தில் உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீத இயற்கை எரிவாயு ஆகியவற்றை இந்த வழியாகத்தான் பெறுகிறது. இதனால் இந்தியா மற்றும் ஒபெக் நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கியதில் இந்து இந்த வழியாக சென்ற 1000 கப்பல்களின் ஜிபிஎஸ் தொடர்பில் இடையூறுகள் ஏற்பட்டது. இப்பகுதியில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்புக்காக பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் ஒரு பகுதி முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அணுக்கரு பரவாமை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை மீறியுள்ளது. இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு கடும் விளைவுகள் ஏற்படும். ஐ.நா உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடத்தை மீறல் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும். ஐ.நா சாசனம் மற்றும் அதன் விதிகளின்படி, சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “போர் இப்போதான் தொடங்கிருக்கிறது” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக்கடல் மற்றம், செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஈரான் ராணுவம் (Artesh என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guard Corps – IRGC) ஆகிய இரண்டும் ஈரானின் ஆயுதப் படைகளின் பகுதிகள்தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு நோக்கங்களையும், அதிகார அமைப்புகளையும் கொண்டுள்ளன. ராணுவத்தை பொறுத்தவரை அது, மற்ற நாடுகளின் ராணுவத்தை போலவே வழக்கமாக ஈரானிலும் செயல்படுகிறது. ஈரானின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது, எல்லைகளைக் காப்பது, மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவது இதன் முதன்மைப் பணியாகும். தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்புப் படை ஆகிய பாரம்பரிய இராணுவப் பிரிவுகளை இது கொண்டுள்ளது. ஈரானியப் புரட்சிக்கு முந்தைய ‘ஷா’ மன்னரின் பாரம்பரிய இராணுவத்தின் தொடர்ச்சியாக இது கருதப்படுகிறது. இது ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வழக்கமான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. மறுபுறம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை எடுத்துக்கொண்டால், ஈரானியப் புரட்சியின் கொள்கைகளையும், இஸ்லாமிய குடியரசையும் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்த படையில் இருப்பவர்கள் ‘புரட்சியின் காவலர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, ஆயத்துல்லா கொமேனியால் புரட்சிகர சக்திகளை ஒருங்கிணைத்து, பாரம்பரிய இராணுவத்திற்கு ஒரு பதிலாக உருவாக்கப்பட்டது இந்த IRGC. பாரம்பரிய இராணுவம் ஷா மன்னருக்கு விசுவாசமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால் இது உருவாக்கப்பட்டது.
IRGC-க்கும் அதன் சொந்தமாக தரைப்படை, கடற்படை, விமானப்படை, விண்வெளிப் படை மற்றும் குட்ஸ் படை போன்ற சிறப்புப் படைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் வழக்கமான இராணுவத்தை விட நவீன மற்றும் மேம்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் குட்ஸ் படை என்பது, IRGC-யின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவு. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களான ஹிஸ்புல்லா, ஹவுதிகள் போன்ற அமைப்பினருக்கு பயிற்சி, ஆயுத உதவி மற்றும் நிதியுதவி அளிப்பதில் இது முக்கியப் பங்காற்றுகிறது. குட்ஸ் தவிர, பசீஜ் என்ற ஒரு துணை ராணுவ தன்னார்வப் படையையும் IRGC கொண்டிருக்கிறது. இது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும், அரசாங்க எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கும், சமூகக் கட்டுப்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
IRGC, ராணுவத்தை போல அந்நாட்டின் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டிருக்காது. மாறாக, அந்நாட்டின் பெரும் தலைவராக கருதப்படும் காமெனிக்கு மட்டுமே கட்டுப்பட்டிருக்கும். அவருக்கு மட்டும்தான் நேரடியாக ரிப்போர்ட் செய்யும். இந்த அமைப்பிடம் அதி நவீன பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள் இருப்பதால், ஈரான் ராணுவத்தை விட, இதுவே சக்தி வாய்ந்த அமைப்பாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில்தான் இந்த அமைப்பு போர் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறது. “ஃபோர்டோ அணுசக்தி மையம் மீது தாக்குதல் நடக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். அந்த வகையில் இன்று நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் பெரிய அளவுக்கான, திரும்பி வரமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை்” என்று கூறியிருக்கிறது.
இதற்கிடையே இந்த போரில் நுழைவதாக இப்போது ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி படை அறிவித்துள்ளது. ஏமன் நாட்டை பொறுத்தவரை அங்குப் பல காலமாகவே உள்நாட்டுக் குழப்பம் நிலவி வந்தது. இப்போது ஏமன் நாட்டில் தலைநகர் சனா உட்பட வடக்கின் பெரும்பகுதியை ஹவுதி படையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சவுதி அரேபியாவின் ஆதரவுடன் தெற்கு மற்றும் கிழக்கு ஏமனில் ஒரு சில பகுதிகளை மட்டுமே அதிபர் தரப்பு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் தான் ஏமனின் ஹவுதி படைப் போரில் நுழைவதாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹவுதி படை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், உங்கள் கப்பல்களை எங்கள் கடல் எல்லையில் இருந்து வெளியேற்றுங்கள்.. இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஏமனின் ஹவுதி எச்சரித்துள்ளது.
ஏமன் இப்போது இந்த போரில் குதிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதுபோல நடக்கக்கூடாது என்றே பலரும் அஞ்சினர். ஒருவேளை ஏமன் சர்வதேச கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினால் அது சங்கிலி விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இதனால் பல்வேறு நாடுகளும் கூட இந்த மோதலில் உள்ளே வரும். இது உலகப் போர் அல்லது குறைந்தது பிராந்திய போரை உருவாக்கும் ஆபத்து இருப்பதாகவே உலக நாடுகள் அஞ்சுகின்றன. தற்போதைய சூழலில் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. சீனா, ரஷ்யா, பெலாரஸ் உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தியா போன்ற சில நாடுகள் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் இந்த மோதல் தொடர்ந்தால் அது இந்தியா உட்படச் சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
